செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்
செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்
மன்னார்குடியில் செவி்லியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவர்கள் குழு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு பிறகு பல்வேறு புதிய வசதிகள் மற்றும் நவீன கருவிகளுடன் சிகிச்சை அளிக்ககூடிய மாவட்ட ஆஸ்பத்திரியாக செயல்படுகிறது. மன்னார்குடி, கோட்டூர், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, வடுவூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மகப்பேறு சிகிச்சையளிக்கும், விபத்துகளில் பலத்த காயமடைந்தவர்களுக்கும் அவசரகால சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகின்றன. எல்லா நேரங்களிலும் தீவிரமாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் குழு ஒன்று அமைத்து உயிர்காக்கும் மருந்துகளுடன் சிகிச்சையளிக்க கூடிய ஆஸ்பத்திரியாக மன்னார்குடி அரசு மாவட்ட ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வசதி
இதுகுறித்து மன்னார்குடி (மாடன் நகர்) வக்கீல் ரமேஷ் கூறுகையில், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, இந்த பகுதி ஏழை-எளிய மக்களின் உயிர் காக்கும் இடமாக திகழ்கிறது. மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இதய நோய் மற்றும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதல் உதவி அளிக்கவும், நோயின் தீவிரத்தை விளக்கவும், உயிர் வலி காக்கும் மருந்து விரைந்து வழங்கவும் எல்லா நேரங்களிலும் மருத்துவர்கள் குழு மற்றும் ஆக்சிஜன் இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்
மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. லேப்ராஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கும் வசதியை இந்த ஆஸ்பத்திரியில் ஏற்படுத்த வேண்டும்.
செவிலியர் பயிற்சி கல்லூரி
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ஏதுவாக கூடுதல் டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும்.
இந்த ஆஸ்பத்திரியின் இடப்பற்றாக்குறையை போக்க புதிய கட்டிடம் கட்ட வேண்டும். ஆஸ்பத்திரியில் தினமும் பயன்படுத்தப்படும் அனைத்து துணி வகைகளையும் துவைப்பதற்கு பவர் லான்டரி வசதி செய்து தர வேண்டும்.
மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.