தேனி அருகே விபத்தில் முதியவர் பலி; மகன் படுகாயம்
தேனி அருகே சாலையோரம் நின்ற பஸ், கார் மீது அடுத்தடுத்து மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற முதியவர் பலியானார். மகன் படுகாயம் அடைந்தார்.
உத்தமபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் திரவியம் (வயது 74). இவர் தனது மகன் முத்து விஜயராமலிங்கத்துடன் (47) ஒரு ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் தேனி நோக்கி வந்து கொண்டு இருந்தார். பழனிசெட்டிபட்டியில் ஒரு தனியார் லாட்ஜ் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பள்ளி பஸ்சின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மோதியது.
பின்னர் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் அந்த ஸ்கூட்டர் மோதியது. இந்த விபத்தில் திரவியம், முத்து விஜயராமலிங்கம் ஆகிய 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திரவியம் உயிரிழந்தார். விஜயராமலிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.