சின்னாளப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


சின்னாளப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

சின்னாளப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியானார். பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் தாசப்பன் (வயது 75). இவர் இன்று கலிக்கம்பட்டியில் இருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலைக்கு செல்லும் சாலையோரமாக நின்று தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு தாசப்பன், சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கலிக்கம்பட்டியை சேர்ந்த லட்சுமி (40) என்பவர் தாசப்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே அந்த வழியாக பஞ்சம்பட்டியை சேர்ந்த சுகன் ராஜ் (20), மைக்கேல் சகாய ராஜ் (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சுகன்ராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரம் நின்றிருந்த தாசப்பன், லட்சுமி மீது மோதிவிட்டு, சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தாசப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். லட்சுமி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சுகன்ராஜ், மைக்கேல் சகாயராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story