ஊட்டியில் ஒரு ஜோடி கரும்பு ரூ.180-க்கு விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் ஒரு ஜோடி கரும்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் ஒரு ஜோடி கரும்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரித்து உள்ளது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் வாங்கினர்.
இதன்படி கரும்பு, பானை, மஞ்சள் கொத்து, பூளைப்பூ, ஆவாரம்பூ, பனங்கிழங்கு, அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் மற்றும் வண்ண கோலப்பொடி உள்பட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதனால் ஊட்டி மற்றும் குன்னூர் மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
கூட்டம் அலைமோதியது
இதேபோல் தரமான ஒரு ஜோடி கரும்பு ரூ.140 முதல் ரூ.180 வரையும், மஞ்சள் கொத்து ஜோடி ரூ.60 முதல் ரூ.80 வரையும், ஒரு கட்டு பூளைப்பூ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்ட பொங்கல் பானைகள் தரம் வாரியாக ரூ.200 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வண்ண கோலப்பொடிகள் வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டினர்.
உழவர் சந்தையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பழங்கள், காய்கறிகள், இளநீர், கரும்பு என அனைத்து பொருட்களும் அங்கு கிடைத்ததால், பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அங்கு ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60, கொய்யா ரூ.80, ஆப்பிள் ரூ.120, மாதுளை ரூ.170, சாத்துக்குடி ரூ.80, கருப்பு பன்னீர் திராட்சை ரூ.80, பூவன் ரூ.50, செவ்வாழை ரூ.70, கற்பூரவள்ளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
இதேபோல் கமர்சியல் சாலை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் இருந்த பூஜை பொருட்கள் விற்பனை கடையில் சாமி படங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மெயின் பஜார் மற்றும் கமர்சியல் வீதிகளில் ஜவுளிக்கடைகளிலும் பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை விற்பனை அதிகளவில் இருந்தது.
மேலும் கிராமப்புறங்களில் மாடுகள் வைத்திருப்பவர்கள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பனி காரணமாக சத்தியமங்கலம், காரமடை மற்றும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து ஊட்டிக்கு பூக்கள் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பூக்கள் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை கிலோ ரூ.4,400, முல்லை ரூ.2,800, ஜாதிப்பூ ரூ.2,800, செவ்வந்தி ரூ.230, கோழிக்கொண்டை ரூ.160, துளசி ரூ.80 என விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் அரளி பூ ரூ.480, பட்டன் ரோஜா ரூ.330-க்கு விற்பனை ஆனது.