ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணி


தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

தவறி விழுந்த பயணி

மயிலாடுதுறை ரெயில் நிலையம் மெயின் லைன் என்று அழைக்கப்பட்டு முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. இந்த ரெயில் நிலையத்துக்கு காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணிக்கு வந்துள்ளது. முதலாவது நடைமேடையில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவர் எஸ்-5 கோச்சில் ரெயில் நிற்பதற்கு முன்பு ஓடி சென்று ஏற முயற்சித்துள்ளார்.

அப்போது அந்த பயணி படியில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் ஒரு கால் நடைமேடைக்கும், ரெயிலுக்கும் உள்ள இடைவெளியில் சிக்கியது. இந்த சம்பவத்தை பார்த்த அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் துரிதமாக செயல்பட்டு தவறி கீழே விழுந்த பயணி விபத்தில் சிக்குவதற்கு முன்பு காப்பாற்றினார்.

பாராட்டு

லேசான காயங்களுடன் உயிர் தப்பிய பயணி முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இடம் கிடைக்குமா? என்பதற்காக எஸ்-5 பெட்டியில் நின்ற டிக்கெட் பரிசோதகரை பார்த்ததால் அவரிடம் கேட்பதற்காக ஓடிச்சென்று ஏறியது தெரியவந்தது. தொடர்ந்து, ரெயிலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.எப் போலீசார் அறிவுறுத்தி அதே ரெயிலில் அந்த பயணியை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கூறுகையில், ரெயில் நிற்பதற்கு முன்பும், புறப்பட்டு செல்லும்போது ஓடிச்சென்று ரெயிலில் ஏறினால் இது போன்ற விபத்துக்களை சந்திக்க நேரிடும், ரெயில் நின்றவுடன் பயணிகள் இறங்கவும், ஏறவும் வேண்டும், படியில் பயணம் செய்யக் கூடாது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். துரிதமாக செயல்பட்டு தடுமாறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர் குமாருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


Next Story