சமத்துவபுரம் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்
சமத்துவபுரம் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்
ஆலடிக்குமுளை ஊராட்சியில் சமத்துவபுரம் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமத்துவபுரம் குளம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்கு முளை ஊராட்சியில் தமிழக அரசின் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்த சமத்துவபுரத்திற்கு பின்புறம் ஒரு குளம் உள்ளது. இந்த குளம் சமத்துவபுரம் குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தை சுற்றி உள்ள நான்குபுறமும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இங்கு உள்ள படித்துறை சேதமடைந்துள்ளது.
குளத்தில் தவறி விழும் கால்நடைகள்
இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கு பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த குளத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கின்றன. அப்போது எதிர்பாராதவிதமாக கால்நடைகள் குளத்தில் தவறி விழுந்து இறக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் குளத்தின் கரையோரத்தில் விளையாடி கொண்டிருக்கும் போது குளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலடிக்குமுளை ஊராட்சியில் சமத்துபுரம் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். மேலும் சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.