தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி
லத்தேரி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலியானார்.
லத்தேரி-காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும். இதனால் துர்நாற்றம் வீசியது.
இந்த நிலையில் நேற்று ரெயில்வே ஊழியர் தண்டவாளம் வழியாக பணிகளை மேற்கொண்டு போது ஆண் பிணம் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே நிலைய அதிகாரி பாபுசங்கருக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.