திசையன்விளை அருகே மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திசையன்விளை அருகே மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை ேபாலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து அருகே உள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கு தனியார் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திசையன்விளையில் இருந்து நவ்வலடிக்கு மினிபஸ் ஒன்று சென்றது. பயணிகளை இறக்கி விட்டு விட்டு அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுவிட்டனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று கையில் வைத்து இருந்த பெட்ரோல் குண்டை மினிபஸ் மீது வீசினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் மினிபஸ் தீப்பிடித்து எரிந்தது. அதன் இருக்கைகள் எரிந்து நாசமானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பல்க் ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து உடனடியாக உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மினிபஸ் உரிமையாளரான ெடன்சிங் உவரி போலீசில் புகார் செய்தார். தொழில் போட்டி காரணமாக மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். திசையன்விளை அருகே மினிபஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.