இந்தியாவில் விளையும் சிறுதானிய பயிர்களை மலேசியாவில் சாகுபடி செய்ய திட்டம்; மந்திரி தகவல்


இந்தியாவில் விளையும் சிறுதானிய பயிர்களை மலேசியாவில் சாகுபடி செய்ய திட்டம்; மந்திரி தகவல்
x

இந்தியாவில் விளையும் சிறுதானிய பயிர்களை மலேசியாவில் சாகுபடி செய்ய திட்டம் உள்ளதாக மலேசிய மந்திரி கூறினார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் தொழிலதிபர் பிரகதீஸ்குமாரை அவரது வீட்டில் மலேசிய நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு கழக இணை மந்திரி சரஸ்வதி கந்தசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலேசியா நாட்டில் தற்போது வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உணவுப் பொருள் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மலேசியாவில் சிறுதானிய உணவுப் பொருட்கள் சாகுபடி செய்ய முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்காக மலேசியா நாட்டின் தட்பவெப்ப நிலை, மண்வளம், அங்குள்ள விவசாயிகளின் தொழில் திறன் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றவாறு, எந்த விதமான தானியங்களை பயிர் செய்யலாம் என்பது குறித்து வேளாண்மை வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காக இந்தியா வந்துள்ளேன். இங்குள்ள தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு அதன் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் மலேசிய நாட்டு இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறி சிறுதானியங்கள் சாகுபடி செய்ய திட்டமிட்டு உள்ளோம். மேலும் தேவைப்பட்டால் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களை மலேசியா வரவழைத்து பயிற்சி அளிக்கவும் திட்டம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story