தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.தான் கைவிட்டதுஅமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டதே அ.தி.மு.க.தான் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நல் ஆட்சி
தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு வைராபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் நல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை குறித்து தனியார் பத்திரிகை செய்த ஆய்வில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால், யாராலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மக்கள் அதிகமான துயரத்தில் இருந்தார்கள்.
முதல் கைெயழுத்து
அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தில் பேசும்போது, பட்டினி சாவு ஏற்படுவதை தடுக்க மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அரைமணிநேரம் பேசினார். ஆனால் அதற்கு பதில் அளித்த, அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கஜானாவில் பணம் இல்லை என்று பதில் அளித்தார். அப்போது நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால் மக்களுக்கு நிவாரண தொகை கொடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் கூறியதைபோல முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கு 2-வது கையெழுத்திட்டார்.
தாலிக்கு தங்கம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும்போது, ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டதாக கூறி வருகிறார். தமிழகத்தில் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல் முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதி. அதன்பிறகு இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்குவதை ஜெயலலிதா இணைத்து கொண்டார். அதுவும் கடந்த 3½ ஆண்டுகளாக விண்ணப்பித்த யாருக்கும் தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. எனவே அ.தி.மு.க.வினரே இந்த திட்டத்தை கைவிட்டு உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநகராட்சி கவுன்சிலர் ஈ.பி.ரவி, தி.மு.க. நிர்வாகி கே.இ.பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.