கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் பலி


கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் பலி
x

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பிளஸ்-1 மாணவர்

பெரம்பலூர் அருகே நொச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (வயது 16). ரித்திஷ் (12) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். பாஸ்கர் சவுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பெரம்பலூரில் தனியார் பள்ளி ஒன்றில் விஷால் பிளஸ்-1-ம், ரித்திஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று காலை சசிகலா அதே பகுதியில் உள்ள தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்க மகன் விஷாலுடன் சென்றுள்ளார். அங்கு மருந்தில் கலக்குவதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்து வர விஷால் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது விஷால் கால் தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார்.

கிணற்றில் மூழ்கி பலி

நீச்சல் தெரியாததால் விஷால் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாயார் கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றுமாறு கதறி அழுதவாறு வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து விஷாலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷால் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து விஷாலின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் விஷாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நொச்சியம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story