தியாகதுருகம் அருகே திருடியதாக தம்பதி தாக்கியதால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தியாகதுருகம் அருகே திருடியதாக கூறி தம்பதி தாக்கியதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குரூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் (வயது 40), கொத்தனார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகன் ருத்திரபதி(18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
ருத்திரபதி நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்பன் மகன் பாலு(41), இவரது மனைவி இந்திரா(38) ஆகியோர், தங்களது வாத்தை கொன்று விட்டு பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி ருத்திரபதியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதனால் மனமுடைந்த ருத்திரபதி, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைபார்த்த லட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ருத்தரபதியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டா்கள் ஏற்கனவே ருத்திரபதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து லட்சுமி வரஞ்சரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திரபதியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலு, இந்திரா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.