பெற்ற தாய் கண்முன்னே பயங்கரம் அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற பிளஸ்-2 மாணவன்
பெற்ற தாய் கண்முன்னே குடிபோதையில் அண்ணனை பிளஸ்-2 மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை திருவேகம்பன் நகரைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர், காஞ்சீபுரம் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் பிரபுதாஸ், 2 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வின்சென்ட் (வயது 21), ஷெர்லி ஜான் (19) என 2 மகன்கள்.
மூத்த மகன் பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையான் ஷெர்லி ஜான், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஷெர்லி ஜானை, அவரது தாய் செல்வராணி கண்டித்தார்.
கத்தியால் குத்திக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தாய் செல்வராணியை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதனை மூத்த மகன் வின்சென்ட், கண்டித்தார். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த ஷெர்லி ஜான், சமையல் அறையில் இருந்த காய்கள் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் வின்சென்ட்டை சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.
தனது கண் எதிரேயே மூத்த மகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு செல்வராணி கதறி அழுதார். இதுபற்றி காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷெர்லி ஜானை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.