ஆதார் எண்ணுடன் அஞ்சல் கணக்கு தொடங்க வேண்டும்
பிரதம மந்திரி கிசான் திட்ட நிதி உதவி பெற ஆதார் எண்ணுடன் அஞ்சல் கணக்கு தொடங்க விவசாயிகளுக்கு புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஏ.துரைராஜன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த மாதம் வழங்க உள்ள 13-வது தவணைத்தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள், அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பெறப்பட்ட தகவலின்படி புதுச்சேரி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இந்த நிதி உதவியை பெற இயலவில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கினை எளிதில் தொடங்கி மேற்கண்ட உதவித்தொகையை பெறலாம்.
அஞ்சல் கணக்கு
தபால்காரர்கள், கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் மூலம் விவசாயிகள், தங்களின் ஆதார், செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி இகேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்த வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறுமாறு அஞ்சல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.