சாலையின் நடுவே அபாய பள்ளம்


சாலையின் நடுவே அபாய பள்ளம்
x

பேராவூரணியில், ரெயில்வே கேட் அருகே சாலையின் நடுவே அபாய பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணியில், ரெயில்வே கேட் அருகே சாலையின் நடுவே அபாய பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபாய பள்ளம்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள ெரயில்வே கேட் அருகே சாலையின் நடுவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த வழியாக கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் மக்கள் சென்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன.

கீழே விழுந்து காயம் அடைகின்றனர்

மேலும் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள், இந்த வழியாக தான் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ெரயில்வே கேட் அருகே உள்ள அபாய பள்ளம் ஏற்பட்டு, பல நாடகளாக மூடப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.

மழை காலங்களில் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்றால் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மீது தண்ணீர் தெரித்து ஆடைகள் அழுக்காகின்றன.

சீரமைக்க வேண்டும்

ரெயில்வே நிர்வாகத்தால் பராமரிக்க வேண்டிய இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கேட் அருகே உள்ள அபாய பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story