வாலிபர் தவறவிட்ட ஒரு பவுன் சங்கிலி ஒப்படைப்பு
வாலிபர் தவறவிட்ட ஒரு பவுன் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறிதுதூரம் சென்ற நிலையில் கார்த்திக் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் போக்குவரத்து போலீஸ்காரர் உத்திரகுமார் கீழே கிடந்த ஒரு பவுன் சங்கிலியை கண்டெடுத்து, அதனை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழங்கினார். அதையடுத்து நகையின் உரிமையாளரான கார்த்திக்கை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து ஒரு பவுன் சங்கிலியை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஒப்படைத்தார். மேலும் போக்குவரத்து போலீஸ்காரர் உத்திரகுமாருக்கு, இன்ஸ்பெக்டர் பாராட்டு தெரிவித்தார்.