`நீட்' தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி


`நீட் தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி
x

`நீட்' தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி

திருச்சி

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு `நீட்' என்னும் நுழைவுத்தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதினார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து, தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும்வரை காத்திருந்து அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் திருச்சி சமது பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு மகாலெட்சுமிநகரை சேர்ந்த ஜீனத்நிஷாபேகம் (வயது 34) என்ற பெண் `நீட்' தேர்வு எழுதுவதற்காக வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஹால்டிக்கெட்டுடன் மெதுவாக தேர்வு மையத்துக்குள் நடந்து சென்று `நீட்' தேர்வினை எழுதினார். கர்ப்பிணியான அவர் இந்த சூழ்நிலையிலும் `நீட்' தேர்வை எழுதியாக வேண்டும் என்ற மனஉறுதியோடு வந்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இது குறித்து அவரது கணவர் அப்துல்அஜீஸ் கூறுகையில், "எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. எனது மனைவி ஜீனத்நிஷாபேகம் பி.எஸ்.சி.தாவரவியல் படித்து முடித்து, எம்.எஸ்.சி. பயோஇன்பர்மேட்டிக்ஸ் படித்துள்ளார். அவர் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று திருமணத்துக்கு முன்பே தனக்கு ஆர்வம் இருந்ததாக என்னிடம் கூறினார். மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு அழைத்து வந்தேன். தேர்வை சிறப்பாக எழுதியுள்ளதாக கூறினார். ஆகவே நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாகினால் நிச்சயம் மருத்துவம் படிக்க வைப்பேன்" என்றார்.


Next Story