கொடைக்கானலில் கர்ப்பிணி மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்


கொடைக்கானலில் கர்ப்பிணி மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x

கொடைக்கானலில் கர்ப்பிணி சாவில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் கர்ப்பிணி சாவில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி தற்கொலை

கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மோனிஷா (வயது 23). முதுகலை பட்டதாரி. இவரும், வட்டக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாமியும் (25) காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதில் மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி மோனிஷா குடும்ப பிரச்சினை காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரன், தனது மகளுக்கு அறிவுரை கூறி ஆரோக்கியசாமியுடன் அனுப்பிவைத்தார். இதற்கிடையே மறுநாள் மோனிஷா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் ஆரோக்கியசாமியின் தாய், சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோனிஷா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சந்திரன், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல் மோனிஷாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. முருகேசனும் விசாரணை நடத்தி வருகிறார்.

சாலை மறியல்

இந்தநிலையில் மோனிஷா இறந்து 22 நாட்கள் ஆகியும் அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி செல்லும் மலைப்பாதையில் நாயுடுபுரம் பகுதியில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக கொடைக்கானல்-வில்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் சுற்றுலா வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அணிவகுத்து நின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story