சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி
சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியோடினார்.
ஜெயங்கொண்டம்:
சிறையில் அடைப்பு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 70). இவருக்கும், இவரது சகோதரர் கலியபெருமாளுக்கும் இடையே, வயலில் ஆடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கலியபெருமாளின் பேரன் மணிகண்டன்(24), சின்னதுரையை திட்டி தாக்கி கீழே தள்ளியுள்ளார்.இதையடுத்து தன்னை திட்டி தாக்கியதாக கலியபெருமாள், மணிகண்டன் ஆகியோர் மீது உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சின்னதுரை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். இதையடுத்து அவர் கடந்த 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தப்பியோட்டம்
ஜெயங்கொண்டம் கிளை சிறையில் 63 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த சிறையில் 43 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவை சாப்பிடுவதற்காக சிறை வளாகத்தில் உள்ள திறந்தவெளிக்கு கைதிகள் வந்தனர். அப்போது, மணிகண்டன் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி வெளிப்புறத்தில் குதித்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் கைதிகளின் எண்ணிக்கையை சிறை காவலர்கள் சரிபார்த்து அறைக்குள் அனுப்பியபோது, கைதி மண்கணிடன் மட்டும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறை முழுவதும் தேடிப்பார்த்த நிலையில், மணிகண்டன் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியது தெரியவந்தது.
போலீசார் பிடித்தனர்
இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பொன்பகத்சிங் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார், மணிகண்டனை வலைவீசி தேடினர்.இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை பகுதியில் உறவினர் வீட்டில் மணிகண்டன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.