ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் பழுதாகி பின்னோக்கி சென்றதால் பரபரப்புகார் மீது மோதி விபத்து


ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் பழுதாகி பின்னோக்கி சென்றதால் பரபரப்புகார் மீது மோதி விபத்து
x

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் பழுதாகி பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பின்னால் வந்த கார் மீது பஸ் மோதிய விபத்தும் நிகழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சேலம்

ஏற்காடு,

தனியார் பஸ் பழுது

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை 5.40 மணிக்கு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் புறப்பட்டு ஏற்காட்டுக்கு வந்து கொண்டிருந்து. பஸ்சை டிரைவர் ராஜா ஓட்டி வந்தார். மாலை 6.30 மணியளவில் பஸ் ஏற்காடு மலைப்பாதையில் 16-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்தபோது பஸ்சின் பிரேக் சரியாக பிடிக்காமல் பழுது ஏற்பட்டது.

உடனே அதை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து சரி செய்துள்ளனர். அதன் பின்னர் டிரைவர் ராஜா மீண்டும் பஸ்சை ஏற்காடு நோக்கி ஓட்டி வந்தார். பஸ் சிறிது தூரம் வந்த நிலையில் 18-வது கொண்டை ஊசி வளைவு அருகில் பஸ்சின் பிரேக் மீண்டும் பழுதாகி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைச்சாலையில் திடீரென பின்னோக்கி சென்றது.

கார் மீது மோதியது

அப்போது பின்னால் சுற்றுலா பயணிகள் வந்த கார் மீது எதிர்பாராவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர். விபத்தில் காரின் முன்பக்கம் மட்டும் சிறிது சேதமடைந்தது. பஸ் பழுதானதால் அதில் வந்த 81 பயணிகளும் அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே ஏற்காட்டுக்கு வந்துள்ளனர்.

பஸ் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பஸ் அடிக்கடி பழுதடைவது வழக்கமாக உள்ளது என பயணிகள் கூறினர். எனவே மலை பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களை அதன் உரிமையாளர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story