விழுப்புரம் அருகே நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்


விழுப்புரம் அருகே    நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் நடைபெற்றது

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் நாட்டுப்புற கலைஞர்கள், உடுக்கை பம்பை மற்றும் சிலம்பு கலைஞர்கள் நல சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு சிலம்பு கலைஞர்கள் நல சங்க தலைவர் பாலு, செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் பொருளாளர் சக்திவேல், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசினார்.

மாநாட்டில் அரசு விழாக்களில் கட்டாயமாக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடத்திட வேண்டும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, நாட்டுப்புற கலைஞர்கள் ஓய்வூதியம் பெற வழிமுறைகளை எளிமை படுத்த வேண்டும், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் கோடை விழா மற்றும் வெளி மாநில நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களை பங்கேற்க உத்தரவிட வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவில் சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ஒரு மாவட்டத்திற்கு 5 கலைஞர்களை தேர்வு செய்து கவுரப்படுத்த வேண்டும், மாவட்ட அளவில் ஆண்டுதோறும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் மாவட்ட கலை மன்றம், கலை இளமணி, கலை சுடர்மணி ஆகிய விருது பெற்ற கலைஞருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நாட்டுப்புற கலைஞர்கள் மேள தாளங்களுடன் கோலியனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு வந்து, மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயராஜ், தலைமை ஆலோசகர் பழனி, வடிவேல், சர்க்கரை உட்பட நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story