ஆடி அமாவாசை; வேதாரண்யத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி
ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று கடலில் புனிதநீராடினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதி சேது எனப்படும் சித்தர் கடலில் ஆண்டு தோறும் தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள், அர்த்தோதயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களுடைய முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி நேற்று ஆடி அமாவாசை என்பதால் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக சூரிய உதயத்தின் போது ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள் வைத்து தர்ப்பணம் கொடுத்து பின்பு தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம், காதோலை, கருகமணியை கடலில் விட்டு சூரியபகவானை வழிபட்டனர்.
சிறப்பு வழிபாடு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் புனித நீராட வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் பக்தர்கள் புனித நீராடி திருமண கோலத்தில் அருள்பாலித்து வரும் வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அறிவழகன் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, பசுபதி ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.
கடற்கரையில் புனித நீராட வந்தவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதி, உடைமாற்றும் அறை உள்ளிட்ட வசதிகளை நகரசபை தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதே போல் கோடியக்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன் தலைமையில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யபட்டிருந்தது.
வழக்கத்தை விட குறைந்த கூட்டம்
வழக்கமாக ஆடி, தை அமாவாசை நாட்களில் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு புனித நீராடுவார்கள். ஆனால் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ந் தேதி (நேற்று), 31-ந் தேதி என 2 நாட்கள் அமாவசை வருகிறது. இதனால் நேற்று வேதாரண்யம், கோடியக்கரையில் கூட்டம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது