ரூ.89½ லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார்


ரூ.89½ லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை மணிமண்டபத்தை புதுப்பிக்க ரூ.89 ½ லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை மணிமண்டபத்தை புதுப்பிக்க ரூ.89 ½ லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம்

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்டோருக்கு நினைவிடங்கள், சிலைகள் அமைப்பது, பராமரிப்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தியாகி வள்ளியம்மை மண்டபத்தை ரூ.89.54 லட்சம் செலவில் புதுப்பிக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கை குறித்தும், சீர்காழியில் தமிழிசை விழாவை சிறப்பான வகையில் நடத்த வேண்டும் என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

அருணாசலக்கவிராயருக்கு நினைவிடம்

தமிழிசை மூவரில் ஒருவரான தில்லையாடி அருணாசலக்கவிராயருக்கு தில்லையாடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஊர் மக்களின் கோரிக்கை குறித்து கேட்டதற்கு, மணி மண்டபங்கள் அமைப்பதை தவிர்த்து, மக்கள் பயன்படுத்தும் வகையில், சுப நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும் அரங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் முடிவாக இருக்கிறது. சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் உள்ளது.இருந்தாலும் அருணாசலக்கவிராயர் பிறந்த ஊரான தில்லையாடியில் அவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

முன்னதாக தியாகி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை ஆரோக்கிய நாதபுரத்தில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெகடர் மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் அல்மாஸ் பேகம்,தில்லையாடி ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கராஜ், தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்ற நிறுவனர் என்.வீராசாமி, கிராம பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் சா.ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story