நெய்வேலியில் சுதந்திர தின விழா:பழுப்பு நிலக்கரியில் இருந்து டீசல் எடுக்கும் திட்டத்தில் அதிக கவனம்என்.எல்.சி. நிறுவன தலைவர் பேச்சு


நெய்வேலியில் சுதந்திர தின விழா:பழுப்பு நிலக்கரியில் இருந்து டீசல் எடுக்கும் திட்டத்தில் அதிக கவனம்என்.எல்.சி. நிறுவன தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழுப்பு நிலக்கரியில் இருந்து டீசல் எடுக்கும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நெய்வேலியில் நடந்த சுதந்திர தின விழாவில் என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் பேசினார்.

கடலூர்


நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் நிறுவன தலைவரும், மேலாண் இயக்குனருமான பிரசன்ன குமார் மோட்டுபள்ளி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, என்.எல்.சி. ஐ.எல். பாதுகாப்பு படை, தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படை, என்.சி.சி. தன்னார்வலர்கள் மற்றும் நெய்வேலி பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

புதுமையான முயற்சிகள்

பின்னர், நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி பேசியதாவது:-

கடந்த நிதியாண்டில் (2022-23) என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தது.

இந்தியா முழுவதும் தற்போதுள்ள திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பழுப்பு நிலக்கரியில் இருந்து டீசல் எடுக்கும் திட்டம், பழுப்பு நிலக்கரி வாயுவாக்கம், மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் நிலையம், மீண்டும் பம்ப் செய்யப்படும் நீரின் மூலம் இயங்கும் புனல் மின்நிலையத்தை உருவாக்கும் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய திட்டங்களில் புதுமையான மற்றும் நிலையான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

2022-23-ம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட தொகை ரூ.43 லட்சத்து 7 ஆயிரம் கோடியாகும். இதில் சமூகம், சுகாதாரம், குடிநீர் வசதி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்பாடு, நீர்பாசன வசதி, விளையாட்டு, கலாசார பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக மேம்பாடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

இதுதவிர நெய்வேலி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், நெய்வேலியை சுற்றியுள்ள 40 கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் 3 போக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இதுவரைக்கும் 1139 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு 517 பேரை பணிநிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று சுரங்க சட்டப்பூர்வ பணியிடங்கலான ஆட்கள் சேர்ப்பில் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 39 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

விருதுகள்

இதை தொடர்ந்து, மூத்த பணியாளர்கள் மலர்க்கொடி, சுரேஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டது. மேலும் நீண்ட கால சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

முன்னதாக நிறுவன தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களை மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் வரவேற்றார். இதில் என்.எல்.சி. இந்தியா நிறுவன திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன்ரெட்டி, சுரங்கம் மற்றும் நிதி(பொறுப்பு) இயக்குனர் சுரேஷ் சந்திரசுமன், மின்துறை இயக்குனர் வெங்கடாசலம் உள்பட அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story