நோயாளிகளை அலைக்கழிப்பதை கண்டித்து போராட்டம்
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அலைக் கழிப்பதை கண்டித்து போராட்டம் நடந்தது.
விருத்தாசலம்,
அலைக்கழிப்பு
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள். ஆனால் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை என்ற காரணத்தை கூறி நோயாளிகளை காத்திருக்குமாறு கூறுகிறார்கள். அவ்வாறு வெகுநேரமாக காத்திருக்கும் நோயாளிகளிடம் டாக்டர் இல்லை, அதனால் இன்று போய்... நாளை வா... என்று ஊழியர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு நோயாளிகளை அலைக்கழிக்கப்படுவதை கண்டித்தும், மருந்து, மாத்திரைகளை தனியார் மருந்தகங்களில் வாங்கி வர சொல்வதை கண்டித்தும், அனைத்து பிரிவிலும் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும், புதிய கட்டிடம் கட்டி நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும், நோயாளிகளுடன் வருபவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், மருத்துவமனையை சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதை தடுத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வீரமணி, கிளை செயலாளர் கர்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி அறிந்ததும் தலைமை மருத்துவர் எழில், போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.