மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம்
மயிலாடுதுறை, திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை, திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகலை எரிக்கும் போராட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன்களை முற்றிலுமாக புறக்கணித்ததாக குற்றம் சாட்டி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் நகலை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பட்ஜெட் நகல் எரிப்பதை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர்
திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.