பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கைது
ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
காரில் பயங்ர ஆயுதங்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆலங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக கார் ஒன்று சென்றது. இதனைக் கண்ட போலீசார் அந்தக் காரை சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் கத்தி, வீச்சரிவாள் என பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.
ரவுடி கைது
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த காசி (வயது 33) என்பதும் இவர் மீது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரவுடி காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.