சின்னாளப்பட்டி அருகே பறக்க முடியாமல் தவித்த அரியவகை ஆந்தை
சின்னாளப்பட்டி அருகே பறக்க முடியாமல் தவித்த அரியவகை ஆந்தை பிடிபட்டது.
சின்னாளப்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடு, மாடு கொட்டகைகள் மற்றும் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான காகங்கள், பருந்துகள் வட்டமிட்டு பறந்துக்கொண்டிருந்தன.
இதனை பார்த்த சரவணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது அரியவகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் தவித்தது. மேலும் அதனை காகங்களும், பருந்துகளும் கொத்தின. உடனே சரவணன், காகங்கள் மற்றும் பருந்துகளை விரட்டிவிட்டு ஆந்தையை மீட்டார். பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் வந்து பார்த்தபோது, சரவணன் மீட்ட ஆந்தை, அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை என்பது தெரியவந்தது. மேலும் இந்த ஆந்தை கடல்மார்க்கமாக பறந்து வந்தபோது, வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என்றனர். இதையடுத்து அதனை கைப்பற்றிய தீயணைப்பு படைவீரர்கள், சாக்குப்பையில் அடைக்க முயன்றனர்.
அப்போது அந்த ஆந்தை தீயணைப்பு படைவீரர்களான அழகேசன், லட்சுமணனை தனது அலகினால் கொத்தியது. இதில், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஆந்தையை சாக்குப்பையில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.