கன்றுக்குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை


கன்றுக்குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை
x

தொப்புள் கொடி வழியாக சாணத்தை வெளியேற்றிய கன்றுக்குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர்

கன்றுக்குட்டி அவதி

வேலூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவர் வீட்டில் பசுக்களை வளர்த்து வருகிறார். ஒரு பசு 2 மாதங்களுக்கு முன்பு ஈன்ற பெண் கன்றுக்குட்டி ஒன்று பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டி இருந்துள்ளது. இதனால் பிறந்ததில் இருந்தே சாணம் ஆசன வாய் வழியாக வெளியே வராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறி சரியாக உணவு உண்ண முடியாமலும் அவதிப்பட்டு வந்தது.

பின்னர் அந்த கன்று குட்டியை அவர் வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அதனை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் ரவிசங்கர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.

அறுவை சிகிச்சை

அதன்படி மருத்துவமனையில் பிரதம மருத்துவர் நாசர் தலைமையில், டாக்டர் ரவிசங்கர் மற்றும் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குடல் பகுதி சீராக இல்லை என்பதும், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் 2 குடல் பகுதியையும் ஒன்றாக இணைத்தனர்.

மேலும் சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்றுக் குட்டி ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது. இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி நலமுடன் உள்ளது.


Next Story