ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: நீலகிரி தொகுதியில் 80 சதவீத கடைகள் அடைப்பு-போலீசார் தீவிர கண்காணிப்பு
ஆ.ராசா எம்.பி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 80 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி
ஆ.ராசா எம்.பி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 80 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சர்ச்சை பேச்சு
தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கடந்த 6-ந் தேதி சென்னையிவ் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த விவகாரம் தமிழகத்தில் தற்போது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினர் வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் இந்து அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, வியாபாரிகளிடம் நோட்டீஸ் வினியோகம் செய்தனர். மேலும் அவர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதேசமயம் இந்து முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் வழக்கம்போல் கடைகளை திறக்க வேண்டும் என தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரும் துண்டுபிரசுரம் வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீஸ் கண்காணிப்பு
இவ்வாறு பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறுவையில் நீலகிரி மாவட்டத்தில், சில காரணத்திற்காக குறிப்பிட்ட அமைப்புகள் சார்பில் கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடையடைப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பினரோ யாரையாவது வலுக்கட்டாயமாக தங்களது கடையை மூடும் படி கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று இந்து முன்னணி அறிவிப்பின் படி நீலகிரி தொகுதியில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட பல இடங்களில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன.
மார்க்கெட் மூடல்
ஊட்டியில் கமர்சியல் வீதி, மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களும் பல்வேறு இடங்களில் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் தயிர் மற்றும் பால் விற்பனை, மருந்து கடைகள், பேக்கரி, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான சதவீத கடைகள் மட்டும் திறந்திருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடைகளை மூட வலியுறுத்தியதாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பந்தலூரில் கடையை திறந்ததாக அதன் மீது கல்வீசப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூரில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது. முன்னதாக 19-ந் தேதி இந்து முன்னணி சார்பில் வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் உட்பட அனைத்து சங்க பிரதிநிதிகளிடம் போராட்டத்துக்கு ஆதரவு கோரப்பட்டது. இதை அறிந்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைத்து கடைகளுக்கும் சென்று போராட்டத்தை கைவிட்டு கடைகளை திறக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனால் கூடலூரில் பரபரப்பு நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கூடலூர் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அப்போது எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கடைகளை திறக்கும்படி வலியுறுத்தினர். இதற்கு இந்து முன்னணியினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூட்டத்தை கலைக்கும் பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் எச்சரிக்கை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே கூடலூர் நகரில் சில கடைகள் தவிர முழு அடைப்பு நடைபெற்றது. ஆனால் வழக்கம் போல் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்பட்டது. தொடர்ந்து ஆட்டோக்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம் போல் ஓடியது. மசினகுடியில் சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மினி பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசுப் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மருந்துக் கடைகள், பால் பூத்துக்கள் மற்றும் ஒரு சில உணவு மற்றும் தேநீர் கடைகள் மட்டும் திறக்கபட்டிருந்தன. அந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தி.மு.க நிர்வாகிகள் கடைகளைத் திறக்குமாறு கடை உரிமையாளர்களை வலியுறுத்தினர். போலீசாரும் கடைகளைத் திறந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து மேலும் சில கடைகள் திறக்கப்பட்டன. எனினும் கோத்தகிரி பகுதி வாகன போக்குவரத்து குறைந்து, வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னூர்-மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், அங்குள்ள வணிக வளாகம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் கடைகள் திறந்து இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில், உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுமுகையில் சில்க் பஜார் உட்பட நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதேபோல் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள், வீதிகளில் கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சிறிய கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்து இருந்தது. அன்னூரில் 98 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளரும், அன்னூர் ஒன்றிய கவுன்சிலருமான ஜெயபால் உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை அறிந்த, இந்து அமைப்பு நிர்வாகிகள் மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூரில் இருந்து அன்னூருக்கு வந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் மண்டபத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். இதனால் அன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.