ஆ.ராசாவின் 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணம் திடீர் ஒத்திவைப்பு


ஆ.ராசாவின் 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணம் திடீர் ஒத்திவைப்பு
x

கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.

ஊட்டி,

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட தி.மு.க. சார்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர்.

இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. நேற்று மாலை. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. நீலகிரி வரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவும் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்றும் அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story