தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
அரசு பாதுகாப்பு இல்லம் தொடர்பான அறிக்கை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று வேலூரில் ஆய்வு செய்த ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.
ஆணைய உறுப்பினர் ஆய்வு
வேலூர் காகிதப்பட்டறையில் அரசு பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றதும், ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது.
இந்தநிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று அரசு பாதுகாப்பு இல்லத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் கவிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
திட்டமிட்டு
வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பித்து சென்ற நிலையில் ஆணையத்தின் சார்பில் தாமாக முன்வந்து சம்மந்தப்பட்ட துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விளக்கத்தை தெரிவித்திருந்தார். ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன்.
கூர்நோக்கு இல்லங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே 5 மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள இல்லங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூர்நோக்கு இல்லங்களில் என்ன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவதே ஆகும். வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் இருந்த சிறுவர்கள் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் திட்டமிட்டு வெளியேறி உள்ளனர்.
அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. குறிப்பாக இல்லத்தின் சுற்றுச்சுவர் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லம் சிறப்பாக செயல்படுகிறது. இதுகுறித்த அறிக்கை புதுடெல்லியில் உள்ள ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு ஆணையத்தின் பரிந்துரைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படும். இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பித்து சென்ற நிகழ்வில் நிர்வாகத்தின் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை தனிப்படை அமைத்து ஒருவரை தவிர மற்ற அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இங்கு ஓவியப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. எனவே ஆணையத்தின் சார்பில் கலெக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு மாணவர்கள் தங்கும் அறைகள் காற்றோட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் நியமனம் தொடர்பாக உடனடியாக நேர்காணல் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், பாதுகாப்பு இல்லத்தில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நேர்காணல் நடத்தப்படும். சில பணியாளர்கள் நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.