கிரெயின்ஸ் இணையதளம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள்
கிரெயின்ஸ் இணையதளம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய 4 தாசில்தார் அலுவலகங்கள் உள்ளன இங்கு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் கிரெயின்ஸ் இணையதளத்தில் விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை ஒரு முறை பதிவு செய்தால் அதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் பெற விண்ணப்பம் செய்யும்போது கிராம நிர்வாக அலுவலரின் பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு, ஆதார் எண், முகவரி சான்றிதழ், வருமான சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றுவதற்காக இந்த கிரெயின்ஸ் இணையதள வசதி பயன்படுத்தப்படவுள்ளது. ஒரு முறை விவசாயிகள் தங்களது முழு தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள், மானிய உதவிகள், காப்பீட்டு தொகைகள் போன்ற பல்வேறு சேவைகளை இதன் மூலம் எளிதில் பெற முடியும். இந்த இணையதளத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த துறைகளை சார்ந்த நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு போன்ற பல்வேறு சான்றிதழ்கள் இணைப்பதற்கான அவசியம் இருக்காது. ஆகையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த கிரெயின்ஸ் இணையதள வசதி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி தங்களது விவசாய நிலங்கள் தொடர்பான தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கான பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் இணைந்து விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார். இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, தாசில்தார்கள் கிருஷ்ணராஜ் (பெரம்பலூர்), முத்துக்குமார் (ஆலத்தூர்), துரைராஜ் (வேப்பந்தட்டை), அனிதா (குன்னம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.