அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுகோள்
மயிலாடுதுறையில் உள்ள அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?. இவைகள் தற்போது எப்படி இயங்குகிறது? அனைத்து உணவு வகைகளும் தரமாக இருக்கிறதா? தாராளமாக கிடைக்கிறதா?. முன்பு இருந்ததுபோல் அம்மா உணவகங்களில் கூட்டம் இருக்கிறதா? என்பதை இங்கே காண்போம்!.
மயிலாடுதுறை நகரில் கடந்த 24.5.2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகம் மயிலாடுதுறை அரசு பெரியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை ரோஜா மகளிர் குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த குழுவில் உள்ள 12 பெண்களில் 6 பேர் வீதம் காலை, மதியம் என 2 ஆக பிரிந்து பணியாற்றுகின்றனர். உணவு தயாரிப்பது, வினியோகிப்பது, பாத்திரங்களை கழுவுவது என பணிகளை பிரித்து செய்கின்றனர். இந்த உணவகத்தில் இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகின்றன.
கொரோனாவால் விற்பனை பாதிப்பு
இதுகுறித்து அங்கு பணியாற்றும் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
தற்போது ஒரு நாளைக்கு காலையில் ஆயிரம் இட்லியும், மதியம் 150 பேருக்கு சாம்பார் சாதம், 150 பேருக்கு தயிர் சாதம் என தயார் செய்து விற்பனை செய்கிறோம். காலை 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் வியாபாரம் முடிந்து விடும். தொடர்ந்து 11 மணி முதல் மதியம் 3 மணிவரை உணவு வினியோகிக்கிறோம். தொடக்க காலத்தில் அதிக அளவில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்ததால் தற்போது குறைந்த அளவில் உணவு தயாரித்து வினியோகிக்கிறோம். மலிவு விலையில் உணவு கிடைப்பதால் மக்கள் வாங்கி சாப்பிட்டு திருப்தியுடன் செல்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பராமரிக்க வேண்டும்
அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து பொது மக்கள் கூறியதாவது:-
ஆனதாண்டவபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டு:- ஆதரவற்ற பலருக்கு இந்த உணவகம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது பசியாற உணவு உட்கொண்டு செல்கிறார்கள். இந்த உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்றார். பேரளத்தை சேர்ந்த முத்து:- அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் என்னை போன்ற ஏழைகளுக்கு இந்த அம்மா உணவகம் பெரும் உதவியாக உள்ளது. இங்கு நல்ல முறையில் உணவு தயாரித்து தருகிறார்கள் இந்த உணவகத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றார்.