நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, ஏப். 7-

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா முன்னிலை வகித்தார். ஒன்றிய அலுவலர் செல்வம் தீர்மானங்களை படித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

வடவீரபாண்டியன் (காங்.) : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என்று இந்த மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இளந்தோப்பு வடவஞ்சர் கிராமத்தில் பால்வாடி நடத்த இடமில்லாமல் நூலகத்தில் செயல்பட்டு வருகிறது.

புதிய அங்காடி கட்டிடம்

காந்தி (தி.மு.க.) : காளி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு அங்காடி மோசமான நிலையில் உள்ளது. அதற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி சரிவர கிடைப்பதில்லை.

பாக்கியலட்சுமி (தி.மு.க.) : கடலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிவறை கட்ட வேண்டும் என கடந்த 3 கூட்டங்களில் வலியுறுத்தி உள்ளேன். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுடுகாட்டு பாதை அமைத்து தரவேண்டும்

அர்ஜுனன் (தி.மு.க) : அரும்பூர் கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும்.

சிவக்குமார் (தி.மு.க.) : மாப்பிள்ளை அய்யனார் கோவில் பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடி கட்டிடமும், அழகன் நகர் முத்தப்பன் காவிரி சுடுகாடு கொட்டகையும் மோசமாக உள்ளது. துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்: ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அங்கன்வாடி கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story