பீஞ்சமந்தை மலைக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது


பீஞ்சமந்தை மலைக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது
x

பீஞ்சமந்தை மலைக்கு பல முதல்-அமைச்சர்கள் காலத்தில் கொண்டு வராத சாலை மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்டுள்ளது என்று அதன் திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

புதிய தார்சாலை திறப்பு விழா

அணைக்கட்டு தாலுகா முத்துகுமரன்மலை முதல் பீஞ்சமந்தை மலை வரை 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்சாலை திறப்பு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பீஞ்சமந்தையில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல வனபாதுகாவலர் சுஜாதா வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தார்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் சாலை

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் சுதந்திர தமிழகத்தில் பல முதல்-அமைச்சர்கள் ஆட்சி காலத்தில் பீஞ்சமந்தைக்கு கொண்டு வராத சாலையை மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ. கொண்டு வந்துள்ளார். இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட பல எம்.எல்.ஏ.க்களால் சாதிக்க முடியாததை நந்தகுமார் சாதித்துள்ளார். அணைக்கட்டு தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நந்தகுமார் உதாரணமாக திகழ்கிறார். பீஞ்சமந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் தொலைதொடர்புக்காக கூடுதல் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கதிர்ஆனந்த் எம்.பி.யிடம் கூறுவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்.

மினிபஸ் விட நடவடிக்கை

மலைவாழ் மக்களுக்கு தேவையானது சாலை மற்றும் உணவு. அவை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வனத்துறையினர் உதவ வேண்டும். அந்த மக்களிடம் வனத்துறையினர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

பீஞ்சமந்தையில் சாலை போட்டதால் நான் வந்துபோன அடையாளமாக சென்னைக்கு சென்று போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து பேசி விரைவில் மினிபஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

துணை மின்நிலையம்

நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், நான் சட்டசபை வரலாற்றில் அதிக முறை கேட்ட பெயர் பீஞ்சமந்தை தான். சட்டசபையில் சபாநாயகர் பெயரை சொல்லாமல் கூட நந்தகுமார் பேசுவார். ஆனால் அவர் பீஞ்சமந்தை என்ற பெயர் இல்லாமல் சட்டசபையில் பேசியது கிடையாது. இத்தகைய ஊரை பார்க்க ஆசைப்பட்டு இங்கு வந்தேன். நந்தகுமார் எம்.எல்.ஏ. முயற்சியினால் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. பைபிளில் உள்ளது போன்று தேவனால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை என்பது போன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.

பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு துணை மின்நிலையம் அவசியமாகும். 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு துணை மின்நிலையம் அமைப்பதற்கு உரிய முன்மொழிவு பெற்று பூர்வாங்க பணிக்கான முயற்சிகள் மேற்கொள்வோம். மேல்அரசம்பட்டில் அணைகட்டுவதற்கு தேவையான நிதி வழங்க அமைச்சராகிய நான் அணை போடமாட்டேன் என்றார்.

ரூ.120 கோடியில் பணிகள்

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், பீஞ்சமந்தைக்கு சாலை அமைத்தது மிகவும் சிறப்பான நிகழ்வு. பல ஆண்டுகள் போராடி நந்தகுமார் எம்.எல்.ஏ. இந்த சாலையை கொண்டு வந்துள்ளார். வனப்பகுதியில் சாலை அமைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். பல மலைப்பகுதிகளில் இருந்தும் சாலைகள் அமைக்க கோரிக்கைகள் வருகிறது. மலைப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளில் முக்கியமானது சாலை. அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட சாலை தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

பீஞ்சமந்தை மலைப்பகுதியில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.23 லட்சத்தில் 3 ஆழ்துளை கிணறுகளும், ரூ.50 லட்சத்தில் 167 சூரிய மின்விளக்குகள், ரூ.33 கோடியில் 31 சாலைகள், ரூ.7 கோடியில் குடிநீர் வசதி, ரூ.1.95 கோடியில் நூலக கட்டிடம். ரூ.59 கோடியில் வீடுகள், ரூ.4 கோடியில் தானிய களம், ரூ.26 லட்சத்தில் விளையாட்டு வசதி, ரூ.9 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.120 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அல்லேரி, தொங்குமலை, தெள்ளை, சாத்தனூர் வெள்ளக்கல்மலை, ஜார்தன்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட பல மலை கிராமங்களில் பல்வேறு வனத்துறை சார்ந்த பணிகள் செய்வதற்கு தேர்வு செய்துள்ளோம் என்றார்.

நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து 794 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பயிர்க்கடன், வீட்டுமனை பட்டா, ஆடு, மாடு கொட்டகை, நலவாரிய அட்டை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி என ரூ.10 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

விழாவில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் கவிதா, மண்டல வனப்பாதுகாவலர் ராகுல் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story