216 வகையான பழமையான மரங்களை கொண்ட சரணாலயம்
தஞ்சை அருகே திருமலைசமுத்திரத்தில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள திருமலைசமுத்திரம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விருட்சவனம் அமைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார். அதன்படி 7 ஏக்கர் பரப்பளவில் விருட்ச வனம் அமைக்க தயார் செய்யப்பட்டு பல்வேறு பாரம்பரிய மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி இந்த விருட்ச வனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கருவாலி, திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாணவ, மாணவிகள்
இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து நேற்று திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை விருட்ச வனத்துக்கு வரவழைத்து மாவட்ட கலெக்டர் அங்குள்ள மரங்கள் பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலைசமுத்திரம் ஊராட்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வன விருட்சம் என்ற மரங்கள் சரணாலயம் தொடங்கப்பட்டது. தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் 216 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த சரணாலயத்தில் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புங்கனூர் பசுக்கள் மற்றும் காளை வளர்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு
அதேபோல உலகத்திலேயே சிறிய ரகமான கோழி மற்றும் பெரிய கோழி இனங்களும், வாத்து, முயல், வான்கோழி போன்றவைகளும் வளர்க்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மீன் பண்ணை குட்டையும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த மரங்களின் சரணாலயம் பெரிய அளவில் உதவிடும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சரணாலயத்தை பார்வையிடலாம். இன்னும் 3 வாரங்களில் சுற்றுலாப்பயணிகளும் இந்த சரணாலயத்துக்கு வந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டு பூங்கா
விரைவில் 100 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் சிறிய திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், கோட்டாட்சியர் ரஞ்சித், செயற்பொறியாளர் செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சங்கர், தாசில்தார் மணிகண்டன், திருமலைசமுத்திரம் ஊராட்சி தலைவர் வெங்கடேஷ், நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.