மயிலம் அருகேகிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி
மயிலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலியானார்.
மயிலம்,
6-ம் வகுப்பு மாணவி
மயிலம் அருகே கண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 11). தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தூங்கி எழுந்த மாணவி அருகே உள்ள வயலுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு தரைமட்ட கிணற்றுக்குள் மாணவி எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் இறங்கி மாணவியை தேடியதுடன், இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கும், மயிலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி மாணவியை பிணமாக மீட்டனர். அப்போது மாணவியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.