10 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கிய பள்ளி மாணவி


வேலூரை சேர்ந்த 10 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கிய பள்ளி மாணவியை தபால் அதிகாரி பாராட்டினார்.

வேலூர்

வேலூர் சின்ன அல்லாபுரம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜா, சலூன் கடை வைத்துள்ளார். இவரின் மகள் மோனிகா தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மோனிகா தனது பெற்றோர் தினமும் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சிறுக, சிறுக மொத்தம் ரூ.2,500 சேமித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று மாணவி மோனிகா சேமிப்பு பணத்தை கொண்டு தனது தங்கை மைத்ரவர்ஷினி மற்றும் வேலூரை சேர்ந்த ஏழைக்குழந்தைகள் 9 பேர் என்று மொத்தம் 10 குழந்தைகளின் பெயரில் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, துணை அஞ்சலக அதிகாரி வீரன் ஆகியோர் 10 குழந்தைகளின் சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து அதற்கான புத்தகத்தை குழந்தைகளிடம் வழங்கி, மோனிகாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி மோனிகா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,200-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதிக்காக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story