தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா மூடை
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா மூடையை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா மூடையை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா மூடை
ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு சாக்கு மூடை ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு சென்று அந்த சாக்கு மூடையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
அதில் 20 பார்சல்கள் இருந்தன. ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. படகில் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்திச் சென்றபோது, இந்திய கடற்படை அல்லது கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் வந்ததை கண்டதும் இந்த கஞ்சா மூடையை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என்றும், கடல் அலையில் இழுத்து வரப்பட்டு இந்த கஞ்சா மூடை தனுஷ்கோடியில் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
கஞ்சா மூடையை கடலில் வீசிவிட்டு தப்பிய கடத்தல்காரர்கள் யார்? எந்த படகில் தப்பினர்? என்பது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு இதே தனுஷ்கோடி கடற்கரையில் தலா 2 கிலோ வீதம் கொண்ட 45 கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தது குறிப்பிடத்தக்கது.