ஆலமரத்தில் ஏறி இறங்க மறுத்த பெண்ணால் பரபரப்பு
ஆலமரத்தில் ஏறி இறங்க மறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது மனைவி சித்ரா (வயது 40). நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள வவ்வால்கள் அடையும் பெரிய ஆலமரத்தில் ஏறி நின்று கொண்டு இறங்க மறுத்துள்ளார். அப்பகுதியினர் சென்று அவரை இறங்கச் சொன்ன போது தன்னை அடிக்கிறார்கள், சொத்துப் பிரச்சினை என்று முன்னுக்குப்பின் முரணாக பேசிக் கொண்டு இறங்க மறுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை இறங்க சொன்ன போதும் அவர் இறங்கவில்லை. இதனால் போலீசார் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் ஏறி நின்ற சித்ராவிடம் சமாதானமாக பேசி அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.