தொடர் விபத்துகள் எதிரொலி: கல்லட்டி மலைப்பாதையில் தடையை மீறி வெளிமாநில பதிவெண் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை -போலீசார் எச்சரிக்கை


தொடர் விபத்துகள் நடைபெறுவதால் கல்லட்டி மலைப்பாதையில் தடையை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்

தொடர் விபத்துகள் நடைபெறுவதால் கல்லட்டி மலைப்பாதையில் தடையை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர் விபத்துகள்

ஊட்டியில் இருந்து தலைக்குந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதேபோல் முதுமலை, மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. 36 கொண்டை ஊசி வளைவு கொண்ட செங்குத்தான மலைப்பாதை என்பதால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வெளிமாநில வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு சென்னையில் இருந்து சுற்றுலா வேனில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். தொடர்ந்து ஊட்டியில் இருந்து மசினகுடி செல்வதற்காக கல்லட்டி மலைப்பாதை 13 - வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்த ஒரு திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து மாரி என்ற பெண் உயிரிழந்தார். 18பேர் காயமடைந்தனர்.

வாகனங்கள் இயக்கத் தடை

இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட மலைப்பாதை வழியாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் வினோத் குமார், அவரது உதவியாளர் ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.

இந்த நிலையில் இனி வரும் நாட்களில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கும், முதுமலையிலிருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு வெளி மாநில வாகனங்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு, மாவனல்லா, கல்லட்டி, தலைக்குந்தா ஆகிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story