தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து
அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்தினை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்தினை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தில் படுகாயம்
அருப்புக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் சுப்பாராஜ் (வயது51). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் பெரியநாயகபுரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை தனியார் ஓட்டல் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுப்பாராஜ் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேதமடைந்த சாலை
இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு நடக்கும் விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகள் மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் தடுப்புச்சுவர் மீது ஏறி கடக்கின்றனர்.
உயர் கோபுர மின்விளக்கு
எதிர் திசையில் தவறான பாதையில் செல்வது, சிக்னல் கோளாறு இவ்வாறு பல வகையில் விபத்து நேரிடுகிறது.
ஆதலால் அடிக்கடி நடக்கும் விபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் ஏதேனும் சாலைகள் சேதமடைந்து காணப்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு, பாளையம்பட்டி விலக்கு, கட்டங்குடி விலக்கு பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு விபத்துகளை தடுக்க உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.