ஒரே பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டு
ஒரே பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நேற்று 2 வீடுகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை சென்றதில், அவரது வீட்டை உறவினர் ஒருவர் அவ்வப்போது வந்து கவனித்து வந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் வெள்ளி டம்ளர், வெள்ளி தட்டு உள்ளிட்ட பொருட்கள் மட்டும் திருட்டுபோனது தெரிந்தது. பணம், நகை எதுவும் இல்லாததால் தப்பியது. இதேபோல செந்தில்குமார் வீட்டின் எதிர்புறம் உள்ள சண்முகநாதன் என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். சண்முகநாதன் தர்மபுரியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிற நிலையில், அவரது வீட்டில் திருட்டுபோனவை பற்றி தெரியவில்லை. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் 2 வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 2 வீடுகளில் கைவரிசையை காட்டிய மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.