வைகாசி மாதத்தில் தொடர் முகூர்த்தங்கள்திருப்பரங்குன்றம் கோவிலில் குவியும் திருமண முன்பதிவு
திருப்பரங்குன்றம் கோவிலில் தொடர் முகூர்த்தத்தால் திருமணம் முன்பதிவு குவிகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலில் தொடர் முகூர்த்தத்தால் திருமணம் முன்பதிவு குவிகிறது.
கோவிலில் முன்பதிவு
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான், தெய்வானையுடன் திருமண கோலத்தில் அருள் பாலிக்கிறார். எனவே, இந்த தலத்தில் பெரும்பாலான பக்தர்கள் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் 2 அல்லது 3 மாதத்திற்கு முன்பே திருமண முகூர்த்த நாட்களை மையம் கொண்டு திருமண மண்டபங்கள் பதிவாகிவிடுகிறது. இதேபோல கோவிலுக்குள் தங்கத்தேர் நிறுத்தம் இடம் அருகே முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் முன்பு திருமணம் செய்து கொள்வதற்காக பதிவு செய்கிறார்கள்.
திருமண முகூர்த்தம் என்றாலே ஒரு நாளைக்கு சராசரி 35 முதல் 50, 75, 100 என்று பதிவாகிவிடுகிறது. அதனால் திருவிழாவாகவே திருமணங்கள் உருவாகி வருகிறது.
அடுத்தடுத்து 2 நாட்கள் முகூர்த்தம்
கடந்த முகூர்த்த காலங்களில் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் நேற்று வைகாசி மாதத்தின் முதல் முகூர்த்தம் நாளாகும். கோவிலுக்குள் மட்டும் பதிவு செய்யப்பட்ட 36 திருமணங்கள் நடந்தது. இதுதவிர 45 மண்டபங்களில் நடந்த திருமண ஜோடிகள் கழுத்தும், மாலையுமாக, கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
இதனால் கோவிலுக்குள்ளும், கோவிலின் வெளிப்புறமான சன்னதி தெருவிலும் திருமண ஜோடிகளும், திருமணத்திற்கு வந்தவர்களின் கூட்டமும் அலைமோதியது. இதனையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை(புதன்கிழமை), 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முகூர்த்த தினமாகும். இதில் நாளை 35 திருமணமும், 25-ந்தேதி 50 திருமணமும் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, 2 நாட்களிலும் திருவிழாவாக திருமணங்கள் களைகட்டும். இதே சமயம் நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் நிலை உள்ளது.