ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்


ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்
x

வேலூரில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

பயிற்சி மையம்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று முன்தினம் வேலூருக்கு வருகை தந்தார். அவர் வேலூர் சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை வேலூரை சேர்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற வர்ஷினி (வயது 18), அக்ஷிதா (14) மற்றும் பயிற்சியாளர் சேகர் ஆகியோர் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஏராளமான மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று பதக்கங்கள் பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பயிற்சி பெற போதிய பயிற்சி மையம் இல்லை. பயிற்சி பெறுவதற்காக சென்னை செல்ல வேண்டி உள்ளது. எனவே வேலூர் அல்லது காட்பாடி விளையாட்டு மைதானத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறுவதற்காக 200 மீட்டர் நீளம் கொண்ட பயிற்சி மையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு அமைத்து கொடுத்தால் ஏராளமான மாணவர்கள் பதக்கங்களை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உண்டியல் பணம்

வேலூர் சின்னஅல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜா. சலூன்கடை வைத்துள்ளார். இவரது மகள் மோனிகா (9). 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதமாக உண்டியலில் பணம் சேர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பணத்தை தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தார். இந்தநிலையில் வேலூருக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, தான் சேர்த்து வைத்த ரூ.2,500 பணத்தை உண்டியலுடன் அவரிடம் வழங்கினார். மாணவியின் செயலை அமைச்சர் பாராட்டினார்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story