வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பு; வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
தேனி அருகே வணிக வளாகத்துக்குள் பாம்பு புகுந்ததால் வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50). தேனி மாவட்ட வணிகர் சங்க தலைவர். இவருக்கு சொந்தமான வணிக வளாகம் தேனியில், கம்பம் சாலையில் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வணிக வளாகத்தை திறந்து வேலை செய்து கொண்டிருந்தனர். சில வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கினர். அப்போது வணிக வளாகத்துக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த வணிக வளாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் வணிக வளாகத்தைவிட்டு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.
உடனே இதுகுறித்து பாம்பு பிடிப்பவரான கோட்டூரை சேர்ந்த அஸ்வினுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அஸ்வின், வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பு சுமார் 8 அடி நீளம்ெகாண்ட நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு தேனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.