மதுரை நேதாஜி ரோட்டில் தீபாவளி கூட்டத்திற்குள் வந்த பாம்பால் பரபரப்பு
மதுரை நேதாஜி ரோட்டில் தீபாவளி கூட்டத்திற்குள் வந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க நகருக்குள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் நேதாஜி ரோட்டில் உள்ள கடைகளில் நேற்று காலை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக புதிய துணிகளை வாங்க ஆர்வம் காட்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து ரோட்டில் செல்வதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர்.பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.அப்போது துணி வாங்க வந்த சிவபாண்டியன் என்பவர் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு சென்றார். அங்கு பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வதை கண்டு, அதனை லாவகமாக பிடித்து பையில் போட்டு அடைத்தார். அதன்பின்னர் தான் அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறிது நேரத்தில் அந்த இடமே பாம்பை கண்டு அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் தீபவாளி பண்டிகைக்கு துணி வாங்க பாம்பு வந்ததாக செல்போனில் படம் எடுத்து இணைய தளத்தில் பரப்ப தொடங்கினார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணையும் நடத்தினர்.