விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
வடமதுரை அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
வடமதுரை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரமணன் (வயது 50). விவசாயி. இவர் தனது வீட்டின் முன்புறம் கூரை மற்றும் தகர சீட்டுகளை கொண்டு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று காலை அந்த கூரை கொட்டகைக்குள் ரமணன் சென்றபோது, அங்கு புஸ்..புஸ்… என்று சத்தம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமணன் அருகே சென்றார். வீட்டின் சுவரின் இடையில் உள்ள பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் உத்தரவின்பேரில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த 6 அடி நீளம் கொண்ட கோதுமை நாகப்பாம்பை பிடித்தனர்.
உடனே அப்பகுதியில் இருந்த பெண்கள் வெள்ளிக்கிழமை என்பதால் பிடிபட்ட நாகப்பாம்பின் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை சாக்கு மூட்டையில் கட்டி, வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.