தனியார் பஸ்சுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
தனியார் பஸ்சுக்குள் புகுந்த பாம்பால் பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர்.
திருப்பத்தூர்
தனியார் பஸ்சுக்குள் புகுந்த பாம்பால் பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர்.
திருப்பத்தூர் பஸ் நிலையம் காலை, மாலை என எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இந்த நிலையில் நேற்று காலை திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு தனியார் பஸ் வெளியே புறப்பட்டது. அப்போது அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர், தனது அருகே நின்றிருந்த பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து 'பாம்பு', 'பாம்பு' என கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினார். இதனை பார்த்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
இதனிடையே அந்த பாம்பு படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வேலூர் நோக்கிச் செல்லும் மற்றொரு தனியார் பஸ்சில் ஏறி மறைந்தது. இதனால் அந்தப் பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் ஏறி, மறைந்த பாம்பைத் தேடினர்.
பின்னர் ஒரு வழியாக இருக்கை இடைவெளியில் மறைந்திருந்த பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு கொம்பேறி மூக்கன் பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பை பாதுகாப்பாக ஒரு டப்பாவில் போட்டு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் திறந்து விட்டனர்.
பஸ்சுக்குள் புகுந்த பாம்பால் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.